புதுச்சேரி: மின் துறையைத் தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள் இன்று (பிப்.1) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முன்னதாக மின்துறை வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா, ஆகியவை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் ஊர்வலமாகச் சென்று மின்துறை அலுவலகம் எதிரே அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி மத்திய, மாநில அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மின்துறை ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசிற்கு கோரிக்கை
மின்துறை போராட்டக்குழுத்தலைவர் அருள்மொழி கூறுகையில், ’புதுச்சேரி அரசின் மெத்தனப்போக்கால், தற்போது மின் துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊழியர்களின் போராட்டத்தைத் தடுக்கலாம் என்று அரசு நினைக்கிறது. இது முடியாது. அடுத்த கட்டப்போராட்டம் நடத்துவது குறித்து ஊழியர்களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரியில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து மேலும், இந்த போராட்டம் நீடிக்குமானால் குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம், மின்சார கட்டணம் செலுத்துவது, ரீடிங் எடுப்பது உள்ளிட்டப் பல்வேறு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு மூலமாக எதிர்காலத்தில் மாநிலத்திற்கு கிடைக்கும் வருமானம் பூஜ்ஜியம் ஆக்கப்படும்'