தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் எட்டலா ராஜேந்தர். இவர் மீது கடந்த மே மாதம் மேடக் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நில அபகரிப்பு புகார் அளித்தனர். அவரிடம் இருந்து அமைச்சர் பொறுப்பைப் பறித்த மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ், இந்த புகார் தொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமதி கட்சியிலிருந்து விலகுவதாக எட்டலா ராஜேந்தர் அறிவித்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை எட்டலா ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று காலை, எட்டலா சிறப்பு விமானத்தில் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். அங்கு, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி கிஷன் ரெட்டி முன்னிலையில் மதியம் 12 மணியளவில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.