டெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் எல்லை பிரச்னை தொடர்பாக, சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயமடைந்தனர். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. நேற்று (டிசம்பர் 19) விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “சீனா நமது நிலத்தை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. எல்லையில் நடைபெற்ற மோதலில் நமது ராணுவ வீரர்களை சீன ராணுவம் அடித்து விரட்டியது. ஆனால், இதனை மத்திய அரசு புறக்கணிக்கிறது. உண்மையை சொல்ல மறுக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது அவர், “யாங்ட்சேயில் 13,000 அடி உயரத்தில் நமது ராணுவ வீரர்கள் நின்று எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சீன ராணுவம் அடித்தார்கள் என்ற வார்த்தை மிகவும் மோசமானது.
இந்த ‘அடித்தல்’ என்ற வார்த்தைக்கு நமது வீரர்கள் பொருந்தாவர்கள். இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் கெளரவிக்கப்பட வேண்டும். பாராட்டப்பட வேண்டும். அரசின் நடவடிக்கையை அரசியல் ரீதியாக விமர்சிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது ராணுவ வீரர்களை எப்போதும் விமர்சிக்கக் கூடாது” என பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மோதல் எதிரொலி; விமானப் படைகளைத் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தல்