புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள தனது வீட்டில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (ஜூலை 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணமாக வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை கொடுத்துள்ளதாகவும், புதுச்சேரி மீது பிரதமருக்கு அக்கரை உள்ளதாகவும், பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என கூறியுள்ளார்.
அவர் ஒன்றை மறந்துவிட்டார், புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக எங்களது காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. பொலிவுறு திட்டம் எங்களது ஆட்சியில் கொண்டுவந்து ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, ஆயுஷ்மான் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
இது அனைத்து மாநிலங்களுக்கும் உண்டு. ஆனால், எல். முருகன் புதுச்சேரிக்கு மட்டும் நிதி ஒதுக்கியதாக கூறினார். இது முழுவதும் தவறானது. கடந்த ஓராண்டாக ஒரு பைசா கூட மத்திய பாஜக அரசு புதுச்சேரிக்கு தரவில்லை, எல்.முருகன் தவறான தகவல்களை கூறி புதுச்சேரி மக்களை திசை திருப்ப வேண்டாம் என்றார்.
மேலும், எல்.முருகனுக்கு சவால் விடுகிறேன். 3000 கோடி ரூபாயை பிரதமர் புதுச்சேரிக்கு கொடுத்தார் என உறுதி செய்ய முடியுமா? பொது மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா?. எல். முருகன் சொன்னது தவறு என நிரூபிக்க நான் தயாராக உள்ளேன்.
புதுச்சேரி அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு அமைச்சர்கள், திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என துணைநிலை ஆளுநரை சந்தித்து கூறியுள்ளனர். அப்படியென்றால் முதலமைச்சர் மீது இவர்களுக்கு நம்பிக்கையில்லையா?. ஏற்கனவே கூறியது போல் சூப்பர் முதலமைச்சர் தமிழிசை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் ரங்கசாமி 'டம்மி' முதலமைச்சர் என்பதும் உறுதியாகியுள்ளது.
முதலமைச்சரை பற்றி கூட்டணியில் உள்ள அமைச்சர்கள் ஆளுநரிடம் சென்று புகார் கூறுவது விந்தையாகவும், கேலி கூத்தாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சம்பவம் இங்கு நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள். முதலமைச்சர் கூடவே இருந்து குழி பறிக்க வேண்டாம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்...