டெல்லி : நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தின் அவசரகால் கதவை திறக்க முயன்ற பயணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இண்டிகோ விமான நிறுவனத்தின் 6E 308 என்ற விமானம், தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அப்போது மது போதையில் இருந்த பயணி திடீரென விமானத்தின் அவசரகால கதவின் கைப்பிடியை இழுத்து திறக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்ட விமான சிப்பந்திகள் உடனடியாக அவரை தடுத்து இந்த சம்பவம் குறித்து விமானிக்கு தகவல் கொடுத்து உள்ளனர். திடீர் சம்பவத்தால் சக பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு விமான நிலைய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்களுக்கு விமான ஊழியர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் அந்த பயணியை கைது செய்தனர். பாதுகாப்பு படை வீரர்களின் விசாரணையில், கைது செய்யப்பட்ட பயணியின் பெயர் பிரதிக் என்றும், கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
தனியார் இ காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரதிக் மது போதையில் இருந்தாரா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : உக்ரைன் போர் எதிரொலி : ஐநாவின் மூன்று அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷ்யா தோல்வி!