நாட்டின் தலைநகரில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நரேந்திர குமார் ஆர்யா தகவல் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் மேலும் 250 படுக்கைகள் ஏப்ரல் 22ஆம் தேதி சேர்க்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து நரேந்திர குமார் ஆர்யா கூறுகையில், "சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனை செயல்பாட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை மீண்டும் நிறுவுவதற்காக ஆறு நாள்கள் ஆயின. ஏப்ரல் 22ஆம் தேதி இந்த மருத்துவமனையில் புதிதாக 250 படுக்கைகள் சேர்க்கப்படவுள்ளன. இந்தப் படுக்கைகள் அனைத்தும் தீவிர சிகிச்சைப் பிரிவுடன்கூடிய வென்ட்டிலேட்டர் வசதியுடன் அமைக்கப்படுகின்றன.
மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பின் தரத்திலான குளிர்விப்பான் (air conditioning) ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அனைத்துவிதமான சிறப்பான வசதிகள் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.