பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகள் கூட்டமைப்பில் (பிம்ஸ்டெக்) இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மர், பூடான், தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதன் 17ஆவது உச்சி மாநாடு நேற்று (ஏப். 1) இலங்கையில் நடந்தது. காணொலி வாயிலாக நடந்த இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
’போக்குவரத்து இணைப்பிற்கான பிம்ஸ்டெக்கின் பிரதான திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது. மேலும், அடுத்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான குற்றவியல் விஷயங்களில் ஒன்றுக்கொன்று சட்ட உதவி, டிப்ளோமேட்டிக் அகாதமி/பயிற்சி நிறுவனங்களின் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து அடுத்த சில மாதங்களில் இலங்கையில் ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை நடத்த முன்மொழியப்பட்டது வரவேற்கத்தக்கது. இலங்கையில் பிம்ஸ்டெக்கின் தொழில்நுட்ப பரிமாற்ற வசதி (டி.டி.எஃப்.) விரைந்து நிறுவப்படும்’ என்றார்.
இந்தியாவில் உள்ள வானிலை, காலநிலைக்கான பிம்ஸ்டெக் மையம், பேரழிவு குறித்த முதன்மை எச்சரிக்கைகளை வழங்குவதற்கான நவீன வசதிகளுடன் செயல்படுவது இந்த மாநாட்டில் கவனம் பெற்றது. முந்தைய பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அறிவித்த பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை அமைச்சர்கள் பாராட்டினர்.