மகாராஷ்டிரா: தானே மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(40) என்பவர் திங்களன்று (செப்.27) கரோனா தடுப்பூசி பெற கல்வா பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி கூடுதல் ஆணையர் சந்தீப் மால்வி கூறுகையில், "ராஜ்குமார் யாதவ் திங்களன்று அட்கோனேஷ்வர் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ அலுவலர் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான ரசீது வழங்கி வரிசையில் காத்திருக்குமாறு கூறியுள்ளார்.
செவிலியர், மருத்துவர் பணி இடைநீக்கம்
ஆனால் ராஜ்குமார் தவறுதலாக தெருநாய் கடிக்கு வழங்கப்படும் ரேபிஸ் எதிர்ப்பு ஊசி செலுத்தும் வரிசையில் சென்று அமர்ந்துள்ளார். அவரது முறை வந்தபோது , ஊசி செலுத்திக்கொள்ள சென்றுள்ளார். அங்கிருந்த செவிலி ராஜ்குமாரிடம் இருந்த ரசீதை பார்க்காமல், ஊசி குறித்தும் தெரிவிக்காமல் தவறுதலாக ரேபிஸ் எதிர்ப்பு ஊசியை செலுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் ராக்கி தாவ்டே, தவறுதலாக ஊசி செலுத்திய செவிலி கீர்த்தி ராயத் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
மேலும் , ராஜ்குமாரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் கேப்டன்.. கலகலக்கும் காங்கிரஸ்.. அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?