இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த குரலாக, ஜனநாயகத்தை காக்க திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பு, மிரட்டும் வகையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது நியாயமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு சிலர் ஏதேதோ சொல்லி, ஜனநாயகத்தை காக்கும் பிரச்சனையை திசை திருப்பி வருகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதி தீவிரமாக உள்ளது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருவதுடன், 25க்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகளும் கிடைக்காததே அதிக இறப்புக்கு காரணமாக உள்ளது. இதை சரி செய்து, மக்களை காப்பதற்கு மாறாக இந்த கரோனா கோரப்பிடியின் காலத்திலும் அரசியல் செய்து வருகின்றனர். அவர்கள் கூட்டணியில் உள்ள குழப்பத்தாலேயே முதல்வர் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
மேலும் முதல்வர் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் குணமாகி வர வேண்டும் என்று நல்ல உள்ளங்களை கொண்ட மக்கள் வேண்டி வருகின்றனர். இதனாலும், கரோனாவின் பிடியில் மக்கள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அபாயகரமான காலக்கட்டமாக இருப்பதாலும் இக்காலக்கட்டத்தில் அரசியல் செய்வது சரியல்ல.
திமுக ஜனநாயகத்தை மீறி எப்போதும் செயல்பட்டது இல்லை. செயல்படப்போவதும் இல்லை. ஜனநாயக படுகொலை நடந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக ஆட்சியை இழந்துள்ளதே தவிர, ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தது கிடையாது. ஜனநாயகப் பாதையில்தான் திமுக தலைவர்கள் கழகத்தை வழி நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது எதிரணியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகியும், துணை முதல்வர் பதவி வழங்குவதா? இல்லையா? யார், யாருக்கு அமைச்சர் பதவி? யார், யாருக்கு எந்த துறை? இவைகளில் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த குழப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் உள்ள குழப்பத்தையும், அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் மறைப்பதற்காக திமுகவையும் சேர்த்து பல்வேறு கட்டுக்கதைகளை கூறி வருகின்றனர். திமுகவிற்கு அதன் உயரம் தெரியும். மேலும் ஜனநாயகத்தை காக்க நினைக்கும் திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சித்தது கிடையாது, முயற்சிக்கப்போவதும் கிடையாது.
திமுகவிற்கு இந்த முறை புதுச்சேரி மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். அதில் சிறப்பாக செயல்பட்டு, மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து, அடுத்த முறை நிச்சயமாக ஆட்சியை பிடிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.