மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 13 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான வழக்கில், இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இடஒதுக்கீடு வழங்குவதற்கான மாநிலங்களின் அதிகாரத்தைத் தடுத்திட வேண்டாம் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் பேசுகையில், "இடஒதுக்கீடு அளிப்பதற்கான மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு ஊடுருவிவருகிறது. இதனால் மாநில சட்டப்பேரவையின் களத்தைத் தாண்டிவருகிறது. மாநிலங்களவையின் கவனத்திற்கு கொண்டுவர நான் விழைகிறேன். அத்தகைய முயற்சி அரசியலமைப்பின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
தமிழ்நாட்டில் 1993ஆம் ஆண்டின் மாநிலச் சட்டத்தின்படி கல்வி நிறுவனங்களில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. இது ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாக்கப்படுகிறது. மாநில பல்கலைக்கழகமாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம் மாநில இட ஒதுக்கீட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்போது, மத்திய அரசால் தமிழ்நாடு மாணவர்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் 1985ஆம் ஆண்டு முதல் எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பை வழங்குகிறது. இதன் சேர்க்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது. இதில் திடீரென்று, 2020ஆம் கல்வியாண்டு முதல் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பின்பற்றும்படி மத்திய அரசு வலியுறுத்துகிறது.
மத்திய இடஒதுக்கீடு சட்டம் 2006, மாநில பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தாது. சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கான 30 ஆண்டு கால இடஒதுக்கீடு சட்டத்தை உடைத்தெறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களிடையே அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இட ஒதுக்கீடு குறித்து தீர்வு காணப்பட்ட சட்டம் மற்றும் அரசியலமைப்புப் பிரச்சினைகள், தற்போது சட்டம் இயற்றுவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்ற ஏற்றுக்கொள்ள முடியாத முன்மாதிரியின்கீழ் 102ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைத்து மத்திய அரசு முயற்சிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மத்திய அரசு என்ன செய்தியை மாநிலங்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கிறது? அவர்களுக்கு இனி சட்டப்பேரவைத் திறன் இல்லை என்று சொல்கிறதா? இந்தியா இப்போது ஒரு ஒற்றையாட்சி நாடா? கூட்டாட்சி அமைப்பு இனி அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் இல்லையா? மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையில் உள்ள அரசியலமைப்பு பாதுகாப்பை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் இடஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டம் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த இடஒதுக்கீடுகளைப் பெற பலர் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அது, மத்திய அரசால் பாதிக்கக் கூடாது. இடஒதுக்கீடு வழங்குவதற்கான மாநிலங்களின் அதிகாரத்தை எந்தவொரு நிறுவனத்தின் மூலமும் தடுக்க வேண்டாம், அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கும்” என்றார்.