புதுச்சேரி மாநில திமுக செயல்வீரர்கள் கூட்டம், மரப்பாலம் தனியார் மண்டபம் ஒன்றில் நடந்தது. முன்னதாக அண்ணா சிலைக்கு ஜெகத்ரட்சகன் எம்.பி. மாலை அனிவித்தார். தொடர்ந்து பிரமாண்டமான ஊர்வலம் நடந்தது.
பின்னர், மண்டபத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி., பேசுகையில், 'அரசாங்கம், புதுச்சேரியை எப்படி வைத்திருக்க வேண்டும். சொர்க்கமாக மாற்ற வேண்டாமா? புதுச்சேரியில் எத்தனை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எத்தனை குடும்பங்கள் வறுமையில் இருக்கின்றன? வேலை வாய்ப்பு இல்லாமல் புதுச்சேரி மாநில இளைஞர்கள் திண்டாடுகின்றனர்.
புதுச்சேரியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அரசால், ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாங்கித்தரமுடியாதா? புதுச்சேரியில் எவ்வளவு பெரிய துறைமுகம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியாதா... அரசால், புதுச்சேரியை புதுமையான, உலகமே திரும்பிப் பார்க்கும் மாநிலமாக மாற்றுவோம், நாளை நமதே... ஸ்டாலின் ஆணையோடு, திமுக தலைமையில் புதுச்சேரியில் கூட்டணி அமையும்' என்றார்.
மேலும், 'புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும், 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவில்லை என்றால், இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன்' என ஜெகத்ரட்சகன் ஆவேசமாக பேசினார்.
முன்னதாக பேசிய திமுக வடக்கு அமைப்பாளர் சிவக்குமார், புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் எம்.பி.யை கட்சி நிறுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினார். இதனை தொண்டர்கள் பலமாக கைதட்டி வரவேற்றனர்.
இதையும் படிங்க...காங்கிரஸை சாடிய பிரதமர்!