மும்பை: மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான வில் அம்பையும் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை சிவசேனா கட்சியின் விதிகள் மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று (பிப். 20) மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மட்டுமே எங்களின் முழு நம்பிக்கை. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுத்தது என்பது தெரியவில்லை.
சொந்த விருப்பங்களுக்காக பாஜக, நாடு முழுவதும் ஜனநாயகத்தை அழித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படாமல் போனால், 2024ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. சிவசேனா கட்சி, அதன் பெயர் மற்றும் வில் அம்பு சின்னம் என்னிடம் இருந்து திருடப்பட்டிருக்கலாம்.
ஆனால், தாக்கரே என்ற பெயரை யாராலும் திருட முடியாது. பாலாசாகேப் தாக்கரேவின் குடும்பத்தில் பிறந்ததை நான் அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஒரு கட்சியின் நிதி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமை கிடையாது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வதே தேர்தல் ஆணையத்தின் பணியாகும். இதை மீறி தலையிட்டால், ஆணையத்தின் மீது குற்ற வழக்கு தொடரப்படும். எனது கட்சியின் சொத்துக்களை ஏக்நாத் ஷிண்டே தரப்பு கையகப்படுத்தி வருகிறது. பாலாசாகேப் தாக்கரேவின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அவரவர்களின் தந்தையின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாக்குகளை பெறவேண்டும்.
ஜனநாயகமற்ற முறையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும். சின்னத்தையும் வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்தாண்டு சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டதால், ஆட்சி கவிழ்ந்தது.
அக்கட்சியின் மற்றொரு தரப்பான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபித்து, புதிய அரசாக பதவியேற்றனர். அப்போது ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். இந்த கட்சியின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கட்சியை ஒதுக்கியது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் அரசு குறித்து விமர்சிக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - முதன்மை செயலாளர் எச்சரிக்கை