ஹைதராபாத்: கரோனா காலத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த இக்கட்டான சமயத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வு நடத்துவது முறையல்ல. இது அவர்கள் மீது தவறான பார்வையை உருவாக்கும்.
தேர்வு நுழைவுச் சீட்டு சரியாக வழங்கப்படவில்லை. மாணவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் தேர்வு மையத்தை அமைத்து தரவில்லை. இதனால் மாணவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து தேர்வெழுதும் சூழல் உருவாகியுள்ளது.
கரோனாவுக்கு எதிராக போராட தயாராகும் நீட் தேர்வர்களை ஒன்றிய அரசு அவமானப்படுத்துகிறது" என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது
நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் சுமார் 25,000 பேருக்கு அதே தேதியில் வேறு சில தேர்வுகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.
அதையடுத்து நீதிபதிகள் பேசும்போது, "நீட் தேர்வு மாநிலங்கள் அடிப்படையில் நடைபெறுவது அல்ல. தேசிய அளவில் நடைபெறும் அத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொள்வர். தேசிய அளவிலான தோ்வு நடைபெறும்போது மாநில கல்வி வாரியங்கள் அதற்கேற்ப பிற தேர்வுகளைத் திட்டமிட வேண்டும்.
மனுதாரர் குறிப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வு எழுதவுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே. நீட் தேர்வுக்காக மாணவர்கள் கடின முயற்சியுடன் தயாராகி வருகின்றனர். ஒரு விழுக்காடு மாணவா்களைக் காரணம்காட்டி 99 விழுக்காடு மாணவர்களைக் காத்திருக்க வைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.