140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு கடந்த 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரையில் ஈடுபட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனாவிலிருந்து மீண்ட விஜயன்
அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடந்த 8ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், நேற்று அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ’நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
எத்தனை நாள்களில் அடுத்த பரிசோதனை?
மறுபுறம், முதலமைச்சரின் டிஸ்சார்ஜில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி, கரோனா பாதிப்புக்குள்ளான நபருக்கு, குறைந்தது 10 நாள்கள் கழித்துத்தான் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கேரள முதலமைச்சர் 8ஆம் தேதி கரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், வெறும் 7 நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த அவரது மனைவியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது கோவிட் விதிமுறையை மீறிய செயல் எனக் கண்டனங்கள் கிளம்பின. இதற்கு, மருத்துவமனை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறியுடன் சுற்றிய பினராயி
அதில், ஏப்ரல் 4ஆம் தேதி முதலமைச்சருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ஆனால், எட்டாம் தேதிதான் கரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதியானது.
அறிகுறி தென்பட்ட தினத்தைக் கணக்கிட்டதில், 10 நாள்கள் நிறைவடைந்ததினால் அடுத்தகட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பிலிருந்து குணமடைந்த அவரை, ஒரு வாரக்காலம் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
மருத்துவமனை கூற்றுப்படி, ஏப்ரல் நான்காம் தேதியே கரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில், மக்களின் உயிரோடு விளையாடத் தேர்தல் பரப்புரையில் அன்றைய தினத்தை ஏன் ஈடுபட்டீர்கள், தேர்தல் அன்று வாக்களிக்க ஏன் வந்தீர்கள் போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, கடந்தாண்டு, கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என இடுக்கியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரை, விஜயன் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 லட்சத்தைத் தாண்டிய ஒருநாள் கரோனா பாதிப்பு