பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை(ஜன.09) காலை 6.30 மணி அளவில் கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தின் G8-116 விமானம் டெல்லி புறப்பட்டது. விமானத்தில் பயணிக்க 55 பேர் காத்துக்கொண்டு இருந்த நிலையில், அனைவரையும் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு விமானம் சென்றது.
தங்களை அழைத்துச்செல்லாதது குறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. இந்நிலையில், 55 பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றதற்கு உரிய காரணம் கூறுமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரான சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிசிஜிஏ) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 55 பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றதற்கு கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மன்னிப்புக்கோரி உள்ளது. இதுகுறித்து கோ பர்ஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தரைதள பணியாளர்களின் கவனக் குறைவால் 55 பயணிகள் தவறவிடப்பட்டதாகவும், சம்பவம் குறித்து ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக விமான ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து 2 வாரங்களில் டிஜிசிஏ-க்கு அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆணுக்கு லாலிபாப்... பெண்ணுக்கு சாக்லேட் - கோடு வேர்டு வைத்து குழந்தை கடத்திய கும்பல் கைது...