ராணுவத்தில் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடையே விடுவிக்கப்ப்ட குறுகிய கால பிரிவு சேவையில் பணியாற்றிய மருத்துவர்கள் 400 பேரை மீண்டும் தேர்வு செய்து 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குனரகத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘டூர் ஆப் ட்யூட்டி’ திட்டத்தின் கீழ் இவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இதற்காக நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஓய்வு பெற்றபோது பெறப்பட்ட சம்பளத்தில், அடிப்படை ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்து மாத சம்பளத்தை நிர்ணயிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கோவிட் சூழ்நிலையில், உள்ளூர் நிர்வாகத்துக்கு உதவ பல மருத்துவமனைகளுக்கு சிறப்பு நிபுணர்கள் உட்பட கூடுதல் மருத்துவர்கள், கூடுதல் மருத்துவ பணியாளர்களை ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு ஏற்கனவே அனுப்பியுள்ளது.
குறுகிய கால பணியில் உள்ள டாக்டர்களுக்கு 2021 டிசம்பர் 31ஆம் தேதிவரை பணிக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவுக்கு கூடுதலாக 238 மருத்துவர்கள் கிடைப்பார்கள். ஒய்வு பெற்ற ராணுவ மருத்துவர்களை மீண்டும் நியமிப்பதன் மூலம் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு மேலும் வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.