ஹைதராபாத்: நாடு முழுவதும் சிவன் ஆலயங்களில் மகா சிவராத்திரி(Maha shivaratri) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவராத்திரி அன்று தூங்காமல் கண்விழித்து சிவனை வணங்கினால் செய்த பாவங்கள் அத்தனையும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும் என்பது சிவ பக்தர்களின் நன்பிக்கை. இதனால், நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சோதிர்லிங்க தலங்கள் உட்படச் சிவன் கோயில்களில் அதிகாலை முதல் சிவபெருமானைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், குஜராத்தில் அமைந்திருக்கும் சோம்நாத் கோயில், ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதர்நாத் கோயில், தஞ்சாவூரில் அமைந்திருக்கும் பிரகதீஷ்வரர் கோயில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாகாலேசுவரர் கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் போன்ற முக்கிய சிவன் கோயில்களில் அதிகாலை முதலேயே பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்ரீசைலம் மலையில் அமைந்துள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் இன்று மாகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவபெருமானுக்குச் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. இதில், பார்வதி தேவியுடன் சிவபெருமான் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார். இதனைக் காண ஏராளமான பக்த கோடிகள் கோயிலில் குவிந்தனர்.
இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மகா சிவராத்திரியில் உங்கள் ராசி எப்படி உள்ளது?