மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் பட்னாவிஸின் மனைவி அம்ருதா, கடந்த மாதம் 20-ம் தேதி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
இதுதொடர்பான மனுவில், "கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனிக்சா என்ற ஆடை வடிவமைப்பாளர் எனக்கு அறிமுகமானார். ஆடை, நகைகள், காலணிகளில் தாம் பல்வேறு வடிவமைப்புகளை செய்துள்ளதாக என்னிடம் கூறினார். அவர் தயாரித்துள்ள ஆடை, காலணிகள் ஆகியவற்றை பொது வெளியில் அணிந்து செல்லுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அது, தாம் தயாரித்த பொருட்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உதவியாக இருக்கும் என்று கூறினார். தனக்கு தாய் இல்லை என்றும் அனிக்சா என்னிடம் தெரிவித்தார்.
ஒருநாள் தனது உதவியாளரிடம் சில ஆடை மற்றும் நகைகளை கொடுத்து அனுப்பிய அனிக்சா, அதை அணியும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அவர் அனுப்பிய பொருட்களை எனது உதவியாளர் மூலம் அவரிடமே கொடுத்துவிட்டேன். ஒருமுறை என்னைச் சந்தித்தபோது, அவரது தந்தைக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களுடன் பழக்கம் இருப்பதாக அனிக்சா கூறினார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி என்னைத் தொடர்பு கொண்ட அனிக்சா, தந்தை அனில் ஜெயின் சிங்கனி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவரை விடுவிக்க உதவினால் ரூ.1 கோடி தருவதாகவும் கூறினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தப் புகார் மனுவில் அம்ருதா பட்னாவிஸ் கூறியிருந்தார்.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அனிக்சா மற்றும் அவரது தந்தை அனில் மீது சதித்திட்டம் தீட்டுதல், ஊழல் தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், உல்காஸ் நகரை சேர்ந்த அனிக்சாவை போலீசார் இன்று (மார்ச் 16) காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர் சட்டக்கல்லூரி மாணவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனிக்சாவின் தந்தை அனில் மீது சூதாட்டம், மிரட்டல், மோசடி, அரசு அதிகாரிகளை ஏமாற்றியது எனப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கோவா, அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் அனில் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அனிக்சாவின் சகோதரரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'நான் நாட்டைப் பற்றி தரக்குறைவாக பேசவில்லை' - ராகுல் காந்தி விளக்கம்!