மும்பை: மகாராஷ்டிரா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே எல்லை தொடர்பாக பிரச்சனை இருந்துவருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே எல்லை மாவட்டங்களில் உள்ள மாராத்தி மற்றும் கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாற்று மாநில பேருந்துகளில் கருப்பு மை பூசுவதும், கண்ணாடிகளை உடைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மராத்திய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் கர்நாடகாவுக்குச் சொந்தமான பேருந்துகளில் நவம்பர் 25ஆம் தேதி கருப்பு மையை பூசினர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்பு காட்டிவருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்குள் நுழையும் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இந்த சம்பவம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹிரேபாகுவாடியில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக அரசு கைது நடவடிக்கையை எடுத்துவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் தொலைபேசி மூலம் இன்று (டிசம்பர் 6) கேட்டறிந்தார். இந்த பேச்சு வார்த்தையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் வருத்தமடைந்ததை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு கர்நாடகாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மறுப்புறம் பசவராஜ் பொம்மை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிர லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல் வீச்சு; பலர் கைது