கோண்டா : மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என 14 பேரிடம் டெல்லி போலீசார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பி தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 35 நாட்களுக்கும் மேலாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்த டெல்லி போலீசார், பயிற்சியார்கள், நடுவர்கள் என ஏறத்தாழ 125 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அடுத்தக் கட்ட விசாரணையில் டெல்லி போலீசார் ஈடுபட்டு உள்ள நிலையில், பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளித்த வீராங்கனைகளில் மைனர் எனக் கூறிய நபர் தன் புகாரை திரும்பப் பெற்றதாக தகவல் பரவியது. போலீசாரின் விசாரனையில் அவர் மைனர் இல்லை என்பது கண்டறியப்பட்டதாகவும், கைது நடவடிக்கைக்கு பயந்து வீராங்கனை தன் மனுவை திரும்பப் பெற்றதாகவும் தகவல் பரவியது.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திதனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டின் நள்ளிரவில் நடந்த கூட்டத்தில், பாலியல் புகார் விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாலியல் புகார் விவகாரத்தை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது மத்திய அரசு பணிகளுக்கு மீண்டும் திரும்பினர்.
வடக்கு ரயில்வே சிறப்பு பணி அதிகாரிகளாக சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் பணியற்றி வருகின்றனர். மத்திய அரசு பணிகளுக்கு திரும்பியதால் போராட்டத்தை கைவிடவில்லை என்றும் பாலியல் புகார் விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசின் சிறப்பு விசாரணை படை குழு விசாரணை நடத்தியது. பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர்கள், அவர்து குடும்ப உறுப்பினர் என 14 பேரிடம் சிறப்பு விசாரணை படை போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.
மேலும் மல்யுத்த பயிற்சி கூடம், மல்யுத்த போட்டி நடைபெறும் இடம், வீரர், வீராங்கனைகளின் ஓய்வு அறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடந்த விசாரணையில் 14 பேர் கொத்த வாக்குமூலத்தை சிறப்பு போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 137 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : விமானத்தில் வெடிகுண்டு என கூச்சல்... திடீர் சத்தத்தால் பதறியடித்து ஓடிய பயணிகள்!