டெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கிடையே மக்களவையில் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது. தலைநகர் டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைப்பது குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி, டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
டெல்லி அவசரச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதேநேரம் அவசர சட்டத்திற்கு மாற்றாக மசோதாவை நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை டெல்லி சேவைகள் மசோதாவுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி அவசரச் சட்டத்திற்கு மாற்றாக சேவைகள் மசோதாவை தாக்கல் செய்தார். மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மசோதா மீதான விவாதம் தாமதமாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட். 3) மசோதா மீதான விவாதம் மீண்டும் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிங்க : டெல்லியில் மத்திய அரசுக்கு உரிமை! மாநில அந்தஸ்துக்கு நேரு எதிர்ப்பு... அமித் ஷா காரசார விவாதம்!