டெல்லி: வருகிற செப்.17 அன்று வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு லுட்டியன் டெல்லியிலுள்ள ஓர் உணவகத்தில் ’56 இஞ்ச் மோடிஜீ தாலி’ எனும் தாலி விருந்து 10 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது. கன்னாட் பிளேஸிலுள்ள ’அர்டோர் 2.1’ எனும் இந்த உணவகத்தில் வழங்கப்படும் இந்த விருந்தில் 20 வகையான கூட்டுக் கறிகள் , ரொட்டிகள், டால் வகைகள், உட்பட 56 வட இந்திய வகை உணவுகள் அடங்கும்.
இந்த மாபெரும் விருந்தை 40 நிமிடத்தில் இருவராய்ச் சேர்ந்து சாப்பிடுபவருக்கு 8.5 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனவும் இந்த உணவகத்தின் உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெற்றி பெரும் இருவருக்கு நரேந்திர மோடிக்கு பிடித்த சுற்றுலாத் தலமான கேதர்நாத் செல்வதற்கான டிக்கெட்களும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் சுவீட் கல்ரா கூறுகையில், “நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர்கள். எங்கள் உணவகத்தில் நாங்கள் வழங்கும் விருந்துகள் மக்களிடையே என்றும் பிரபலம். இந்நிலையில், தற்போது வருகிற நரேந்திர மோடியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்த ’56 இஞ்ச் மோடி ஜீ’ விருந்தை வழங்கவுள்ளோம். அவர் இந்த நாட்டிற்குச் செய்த தொண்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இதை எங்கள் உணவகத்தில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
வருகிற செப்.17 முதல் செப்.26 வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறும் இருவருக்கு கேதர்நாத் செல்வதற்கான டிக்கெட்களும் வழங்கப்படும். மேலும், இந்தப் போட்டியில் விருந்தில் வழங்கப்பட்ட 56 வகை உணவுகளை 40 நிமிடத்தில் உண்பவர்களுக்கு 8.5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
மேலும் விரைவில் நாட்டின் விலைவாசி ஏற்றத்தை குறைக்கச் சொல்லி கோரிக்கைவிடுத்தும் வகையில் ஓர் தாலி விருந்தை எங்கள் உணவகத்தில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியை விலைவாசி ஏற்றத்தைக் குறைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இந்தத் தாலி இன்னும் 10 நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் ” எனத் தெரிவித்தார். இந்த உணவகத்தில் ஏற்கனவே புஷ்பா தாலி, பாகுபலி தாலி போன்ற விருந்துகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துருக்கி அதிபருடன் மோடி சந்திப்பு - இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை