வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைசெய்ய இந்தியாவிலிருந்து ஏராளமான அழைப்புதவி மையங்கள் இயங்கிவருகின்றன. இதில் போலியான நிறுவனங்கள் பல செயல்பட்டுவருகின்றன. இதனைக் கண்டறிய குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து பல போலி அழைப்புதவி மைய கும்பலை கைதுசெய்து வருகின்றனர்.
போலி அழைப்புதவி மையத்திற்குச் சீல்
டெல்லி பீரா காரி பகுதியில் இயங்கிவந்த போலி அழைப்புதவி மைய அலுவலகத்தை காவல் துறையினர் கண்டறிந்தனர். அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் ரூ.70 கோடி பணத்தைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் 90 கணினி, மடிக்கணினி, மொபைல் போன்கள் ஆகியவற்றைக் காவல் துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அழைப்புதவி மையத்திற்குச் சீல்வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 16 பெண்கள் உள்பட 42 பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த மோசடி குறித்து துணை ஆணையர் (சைபர் கிரைம் பிரிவு) அனிஷ் ராய் செய்தியாளர்களிடம் பேசுகையில், "'குற்றஞ்சாட்டபட்டவர்கள் அமெரிக்கா, பிற நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்களைத் தொடர்புகொண்டு மோசடிசெய்துள்ளனர். சட்ட அமலாக்கத் துறை முகமை அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள், யுஎஸ் மார்ஷல் சர்வீஸ் என அவர்கள் தங்களை உயர் அலுவலர்கள் போல் காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கு, ஆவணங்கள் குறித்த பல தகவல்களை இவர்கள் சேகரித்துவைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவுள்ளன.
அவர்களின் கணக்கில் உள்ள பணத்தை பிட்காயின்களாகவோ அல்லது பரிசு அட்டைகளாவோ வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றஞ்சாட்டபட்டவர்களுக்குப் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்தார்.