டெல்லி: மாநில அரசுத் துறையில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக டெல்லி மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி, மத்திய அரசு தரப்பில் அண்மையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக கடந்த 23ம் தேதி முதல், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார். ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை (மே 30) பிற்பகல் 12.30 மணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்திக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை, கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்த சந்திரசேகர ராவ், மத்திய அரசின் அவசர சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
டெல்லி மாநில அரசை பொறுத்தவரை அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மக்களால் நியமிக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், மாநில அரசு தான் அதிகாரிகளை நியமனம் செய்ய முடியும் எனவும் அறிவித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகள் நியமனத்தை மாற்றி அமைத்தார். இதையடுத்து டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இரட்டை அதிகாரம் நிர்வாக கூட்டுறவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தது. அவசர சட்டத்தை அங்கீகரிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.