ஹைதராபாத்: டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மனிஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடை 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள் பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா இருவரும், மதுபான மாபியாக்களுக்கும், டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகளான கவிதா மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார்.
இதற்காக டெல்லியில் பல்வேறு கட்டங்களாக சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதில் கவிதா கலந்துகொண்டார் என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து கவிதா கூறுகையில், பாஜகவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனது தந்தை கேசிஆர் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். நான் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், இந்த ஊழல் குற்றச்சாட்டில் பாஜக என்னை சிக்க வைக்க முயற்சிக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். எனது தந்தை கேசிஆர் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் பின்வாங்க மாட்டார். நாங்கள் மக்கள் சார்பாக போராடுகிறோம். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா மோடிஜி...? மனிஷ் சிசோடியா கேள்வி...!