டெல்லி: தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை திருத்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து உள்ளதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்து டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை தற்போது அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆஜரான கவிதாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இருப்பினும் மார்ச் 16 ஆம் தேதி தன்னால் ஆஜராக இயலாது என எம்.எல்.சி கவிதா அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து நேற்று (மார்ச். 20) அமலாக்கத் துறை விசாரணைக்கு கவிதா ஆஜரானார். டெல்லி விஜய் சவுக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வந்த எம்எல்சி கவிதாவிடம் 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி அளவில் முடிவடைந்தது. ஏறத்தாழ 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி விசாரணையையும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக 18 மணி நேரம் எம்எல்சி கவிதாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இருப்பினும் இன்றும் (மார்ச். 21) விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்எல்சி கவிதாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனிடையே டெல்லி மதுபான கொள்ளை திருத்த வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எம்எல்சி கவிதா மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு வரும் 24 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் - மத்திய அரசு கடும் கண்டனம்!