டெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியுமான ஷீலா ரஷீத், கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவம் குறித்தும், மத்திய அரசு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார்.
இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை சித்திரவதை செய்வதாக ஷீலா பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்திய ராணுவம் குறித்தும், காஷ்மீர் குறித்தும் தவறான தகவல்களை பரப்பியதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஷீலா ரஷீத் மீது டெல்லி போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஷீலா ரஷீத் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாவுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேசத்துரோக வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஷீலா ரஷீத் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் வினய்குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது ஷீலா ரஷீத் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பேசினார். அதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பில் துணைத் தலைவராக இருந்தபோதும், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: UP Rape: பெண்ணை கட்டிப்போட்டு தீ வைத்த கொடூரம்!