டெல்லி : பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் திகார் சிறையில் உள்ள யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரிய என்.ஐ.ஏ.வின் மேல்முறையீட்டு மனுவில் பதிலளிக்குமாறு யாசின் மாலிக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீருக்கு தனி நாடு அந்தஸ்து கோரி யாசின் மாலிக் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, மும்பை தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் யாசின் மாலிக் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரித்த வந்த நிலையில், அந்த அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதான யாசின் மாலிக்கை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
யாசின் மாலிக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. டெல்லியில் உள்ள திகார் சிறையில் தற்போது யாசின் மாலிக் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ மனுத் தாக்கல் செய்து உள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, யாசின் மாலிக் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார் என்றும் இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் ஒரு பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மரண தண்டனை விதிக்கப்படாது என்று கூறுவது முறையல்ல என்றும், தூக்கு தண்டனையை தவிர்க்க குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தந்திர வேலைகளை கையாளலாம் என்றும் கூறினார். யாசின் மாலிக்கை அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசிய துஷர் மேத்தா, அவருக்கு மரண தண்டனை விதிக்க கோரினார்.
மேலும் 2008 ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நான்கு பயங்கரமான குற்றவாளிகளை விடுதலை செய்ய வழிவகுத்தவர் யாசின் மாலிக் என்றும், அதற்காக இந்திய விமானப் படை அதிகாரிகள் நான்கு பேரை கொலை செய்ததாகவும், அப்போதைய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகளையும் கடத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், அத்துமீறி எல்லையை கடந்து பாகிஸ்தான் சென்று பல்வேறு உளவு வேலைகளில் யாசின மாலிக் ஈடுபட்டதாகவும் அவருக்கு மரண தண்டனை வழங்க உத்தரவிடப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் சொலிசிட்டம் ஜெனரல் துஷர் மேத்தா கோரிக்கை விடுத்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி திரட்டிய வழக்கில் மரண தண்டனை விதிக்கக் கோரிய தேசிய புலனாய்வு அமைப்பின் மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்குமாறு திகார் சிறையில் உள்ள யாசின் மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் அகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த அமரிவின் போது யாசின் மாலிக்கை நீதிமன்றத்தை ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : பீகாரில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்.. காங்கிரஸ் கொடுத்த ஷாக்!