டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அம்மனுவில், "நான் ஒரு புற்றுநோயாளி. அதற்காகத் தற்போது நோயெதிர்ப்புத் தன்மையை மேம்படுத்தும் சிகிச்சை எடுத்துவருகிறேன். எனது மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டி உள்ளது.
அதற்கு கரோனா இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால், நான் ஒரு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளேன். இரண்டாவதாக கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது, எனக்கு ஒவ்வாமைப் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் நான்கு நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றேன்.
அப்போது, எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், இரண்டாவது தவணை கோவாக்சின் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைத்தார். அதன்படி நான் தற்போது இரண்டாவது தவணைக்காக 'கோவின்' தளத்தில் மருத்துவரின் பரிந்துரையுடன் பதிவுசெய்ய முயலுகையில், இணையதளம் என் பரிந்துரையை ஏற்க மறுக்கிறது.
இதனால், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், இரண்டு தவணைகளாக வெவ்வேறு கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைப்பதாகப் பல ஆய்வு முடிவுகளும் தெரிவித்துள்ளன.
எனவே, நான் கரோனா இரண்டாவது தவணை தடுப்பூசியாகக் கோவாக்சினைச் செலுத்திக்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவிற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், உயிர் காக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மனுதாரர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதால், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'வான்வழியாகவும் இனி மருந்துகளை பெறலாம்... தெலங்கானாவில் புதிய முன்னெடுப்பு!