டெல்லி: தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே காணப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலிலும், பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி 15 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.
இதனால், ஆளுநருக்கும், அரசுக்குமான உறவில் கூடுதல் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மதுபான ஊழல், சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் குறித்த வீடியோக்கள் என தொடர்ச்சியாக அரசை ஆளுநர் மற்றும் மத்திய அரசு கடுமையாக விமர்சித்து வந்தது.
அண்மையில் நடந்த டெல்லி மாநகராட்சித் தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு விளம்பரங்கள், அரசியல் விளம்பரங்களாக இருந்ததாகவும், அரசு பணத்தை தங்கள் சுய லாபத்திற்காக ஆம் ஆத்மி பயன்படுத்தி கொண்டதாகவும் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விமர்சித்தார்.
அரசியல் விளம்பரங்களுக்காக அரசு கஜானாவை காலி செய்ததாக ஆம் ஆத்மி கட்சியிடம் 97 கோடி ரூபாய் வசூலிக்குமாறு, டெல்லி தலைமைச்செயலருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார். இது டெல்லியில் பயங்கர பூதாகர பிரச்னையினை வெடிக்கச் செய்தது. ஆளுநருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுகள் மற்றும் விளம்பரங்களை தணிக்கை செய்ய அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்த உள்ளடக்க விதிகளை மீறி, ஆம் ஆத்மி கட்சி அரசு செலவில் அரசியல் விளம்பரங்களை செய்ததாகவும், அதனால் டெல்லி அரசுக்கு ஏறத்தாழ 97 கோடியே 15 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி, தேசிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்து வருவது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க பதைபதைத்து வருவதாகவும்; அதன் விளைவாக ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செயல்களில் துணை நிலை ஆளுநர் ஈடுபட்டு வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சிட்யினர் தெரிவித்தனர்.
விளம்பரத் தொகை வசூலிப்பை அசால்ட்டாக ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமான தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி தகவல் மற்றும் விளம்பரத் துறை, ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், சட்டவிரோதமாக அரசு பணத்தை அரசியல் விளம்பரங்களுக்கு செலவிட்டதாக 97 கோடி ரூபாயும், வட்டியாக 65 கோடி ரூபாய் உள்பட மொத்தம் 164 கோடி ரூபாய் செலுத்துமாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 10 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, கட்சியின் சொத்துக்கள் முடக்கப்படும் என டெல்லி தகவல் மற்றும் விளம்பரத் துறை தெரிவித்துள்ளது. இந்த கடிதத்தால் ஆம் ஆத்மி கட்சியினருக்கு கூடுதல் கொந்தளிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றம் கடந்த 2015 மே மற்றும் 2016 மார்ச் மாதங்களில் வெளியிட்ட தீர்ப்புகளில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், விளம்பர உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அரசின் வருவாயில் உற்பத்தியற்ற செலவினங்களை அகற்றுவதற்கும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அரசு விளம்பரங்களின் உள்ளடக்க ஒழுங்குமுறைக் குழு (சி.சி.ஆர்.ஜி.ஏ.) கடந்த 2016 ஏப்ரலில் அமைக்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்திய சி.சி.ஆர்.ஜி.ஏ., உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறிய விளம்பரங்களை டெல்லி அரசு மேற்கொண்டதாக கண்டறிந்தது. மேலும் சி.சி.ஆர்.ஜி.ஏ. உத்தரவை எதிர்த்து கடந்த 2016ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தகவல் மற்றும் விளம்பரத்துறை, கடந்த 2017ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. தகவல் மற்றும் விளம்பரத்துறையின் நோட்டீசை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனுத் தாக்கல் செய்த நிலையில், அபராதத் தொகையை வசூலிக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையும் படிங்க: Joshimath: ஹோட்டல்கள் இடிப்பு.. மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை