டெல்லியில் பனிக்காலம், வைக்கோல் எரிப்பு போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி காற்று மாசுபாடு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.
டெல்லி காற்று மாசுபாடு
முன்னதாக தடையை மீறி டெல்லியில் இந்த ஆண்டு பலரும் பட்டாசு வெடித்ததை அடுத்து கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி காற்று மாசுபாடு அதிகரித்து தலைநகர் டெல்லி திணறி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பல்வேறுப் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளதாக காற்று தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்திருந்தது.
மேலும், காற்று மாசைக் குறைக்கும் வகையில் அலுவலகத்துக்கு செல்வோர் மாதம் ஒருநாளாவது சைக்கிளில் செல்ல வேண்டும் என முன்னதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிஸோடியா கோரிக்கை விடுத்திருந்தார்.
அறிவிக்கப்பட்ட ஊரடங்கு
இந்நிலையில், தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதை அடுத்து, இன்று (நவ.14) தொடங்கி ஒரு வார கால ஊரடங்கை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (நவ.13) அறிவித்தார். இந்நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த எங்கள் அறிக்கையை நாங்கள் நாளை (நவ.15) உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப் போகிறோம், அதன் முடிவின்படி பணியாற்றுவோம்” என்றார்.
அமைச்சர் விளக்கம்
தொடர்ந்து பேசிய அவர், ”டெல்லியில் கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகள் நவம்பர் 17ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு, ஊழியர்கள் ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை தொலைதூரத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஊரடங்கின்போது நிலவரத்தைக் கண்காணித்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். இருப்பினும், அவசரகால சேவைகளுக்கு விதிக்கப்பட்ட ஊரங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மாசுபாட்டுக்கான காரணங்கள்
டெல்லி மாசுபாட்டிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. வாகனங்கள் மற்றும் கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளால் உருவாகும் மாசு சில காரணங்கள் ஆகும், அதே நேரத்தில் அருகிலுள்ள மாநிலங்களில் வைக்கோல் குப்பைகளை எரிப்பதும் மாசு அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்" என்றார்.
தேர்வுகள் நடைபெறும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இந்த ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் - பொன்முடி பங்கேற்பு