டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து, நிகழ்வில் பேசிய அவர், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரிடமிருந்து தான் அதிகம் ஊக்கம் பெற்றதாக தெரிவித்தார். மேலும், அம்பேத்கர் இணைய வசதி இல்லாத அந்த காலத்தில் கொலம்பிய பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதார பள்ளி ஆகியவற்றில் படித்து மேதமை பெற்றுள்ளார் என தெரிவித்த அவர், நாட்டிற்காக பெரிய கனவுகளை காண வேண்டும் என்பதை அம்பேத்கரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
'சமத்துவ நாடே நமது கனவு'
மேலும் அந்நிகழ்வில் பேசிய அவர்,"அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் பாதைகள் வேறாக இருந்தாலும், அவர்களின் கனவு ஒன்றுதான். இருவரும் சமத்துவம் பெற்ற நாட்டிற்காகவும், தீண்டாமை இல்லாத நாட்டிற்காகவும் கனவு கண்டவர்கள். அவர்கள் புரட்சிக்காக கனவு கண்டவர்கள். இன்றும், அதே புரட்சிதான் நம்முடைய கனவமாகவும் உள்ளது.
இன்று அறிவிக்கிறேன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் தான் இடம்பெறும். அதை தவிர, முன்னாள் முதலமைச்சர்களின் படமோ அல்லது பிற அரசியல்வாதிகளின் படமோ அங்கு இடம்பெறாது" என தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.