டெல்லி: டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு மதுபானக் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மதுபானக் கொள்கையை அரசு திரும்பப் பெற்றது. எனினும் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு நேற்று (பிப்.26) சிசோடியா ஆஜரானார். சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (பிப்.27), சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில், "5 மற்றும் 12 சதவீதம் கூடுதல் கமிஷன் கிடைக்கும் வகையில் இரண்டு மதுக்கொள்கைகள் திருத்தி அமைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சிசோடியா எந்த விளக்கமும் தரவில்லை. மேலும் ஒருசில நிறுவனங்களுக்கு மதுபான விற்பனை உரிமை வழங்க கலால்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி செல்போன்களை அடிக்கடி மாற்றியுள்ளார். இன்னும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 5 நாள் காவலுக்கு அனுமதிக்க வேண்டும்" என வாதாடப்பட்டது.
சிசோடியா தரப்பில், "சிபிஐக்கு ஆதரவாக பதில்களை அளிக்காவிட்டால், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என அர்த்தமில்லை. நிதித்துறை, கல்வித்துறையை கவனிக்கும் அமைச்சர் என்பதால், எனது செல்போனில் பல தகவல்கள் இருக்கும். சிபிஐ காவலுக்கு அனுமதிக்க கூடாது" என வாதாடப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி, மார்ச் 4ம் தேதி வரை 5 நாட்கள் மணீஷ் சிசோடியாவை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிட்டார்.