டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்ற யோகா முகாமில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். அப்போது பாபா ராம்தேவ் 'பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், சல்வாரில் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில் அவர்கள் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிவிட்டது. பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டங்களை தெரிவித்துவருகின்றன. இதனிடையே பெண்களின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் அநாகரீகமான கருத்துக்களைத் தெரிவித்த பாபா ராம் தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மகளிர் ஆணையம், பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) டெல்லி மகளிர் ஆணையமும் பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மனைவியின் முன்னிலையில், பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்து அநாகரீகமானது, ஆட்சேபனைக்குரியது. இந்த கருத்து அனைத்து பெண்களையும் புண்படுத்தியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். பாபா ராம்தேவ் மீது 1993 பிரிவு 12 (2) மற்றும் 12 (3) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வீடியோ; பெண்கள் எதையும் அணியாமலேயே அழகாக இருப்பார்கள் - பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து