டெல்லி: பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித் கான், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றும்படி, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.
மீ-டூ இயக்கத்தின்போது, சஜித்கான் மீது பல நடிகைகளும், மாடல்களும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர் என்றும், அப்படிப்பட்டவரை குழந்தைகளும் குடும்பங்களும் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றும் ஸ்வாதி மாலிவால் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் எதிரொலியாக தனக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித்கானை வெளியேற்றும்படி மத்திய அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியதில் இருந்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக கூறி, பலர் இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுக்கின்றனர். எனது வேலையை தடுத்து நிறுத்த வெளிப்படையாக முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும், பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சி தூண்களாகும் - பிரதமர் மோடி