நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்புகள் இன்னும் குறையாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து உலகம் முழுவதும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாறிய கரோனா வைரஸ்கள் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
’விமானங்களை தடை செய்க’
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்துமாறும், இதில் தாமதம் ஏற்படுத்தினால் அது பெரும் தீங்கு விளைவிக்கும் என்றும் கோரி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (நவ.28) கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது நாடு கரோனாவுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது. மிகுந்த சிரமத்துடனும், லட்சக்கணக்கான நமது கரோனா போர்வீரர்களின் தன்னலமற்ற சேவையாலும் நம் நாடு கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளது" என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய உருமாறிய கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, நாளை (நவ.29) டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (டிடிஎம்ஏ) கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் ’ஒமைக்ரான்’... கரோனா மூன்றாவது அலைத் தடுக்க கர்நாடக அரசு தீவிரம்