டெல்லி: தலைநகர் டெல்லியில் பாயும் யமுனை ஆற்றின் நீர் மட்டம், அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயரப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திங்கள்கிழமை (ஜூலை 10) மாலை, ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டர் என்ற அபாய அளவை தாண்டியது.
மத்திய நீர் ஆணையத்தின் (CWC) வெள்ள கண்காணிப்பு போர்டலில் தெரிவிக்கப்பட்டு உள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமை (ஜூலை11 ) காலை 6 மணியளவில், யமுனை ஆற்றின் மீது அமைந்துள்ள பழைய ரயில்வே பாலத்தின் நீர் மட்டம் 206.28 மீட்டராக உயர்ந்து இருந்தது. ஹரியானா மாநிலம், யமுனாநகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து, யமுனை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படிவதன் காரணமாக, ஜூலை 11ஆம் தேதி பிற்பகலில், நீர்மட்டம், 206.65 மீட்டராக உயரும் என்றும், அதற்குப்பின் நீர்வரத்து, படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 10ஆம் தேதி, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லை எனவும், ஆனால் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க நகர அரசாங்கம் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் அறிக்கையின்படி, ஹத்னிகுண்ட் அணையின் நீர் வரத்து, திங்கள்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) 3 லட்சம் கன அடியாக அதிகரித்தது. வழக்கமாக அணைக்கு நீர் வரத்து 352 கனஅடியாக இருக்கும், ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஒரு கனஅடி என்பது விநாடிக்கு 28.32 லிட்டருக்குச் சமம். இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் டெல்லிக்கு வர இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியின் சில பகுதிகள் உள்ளிட்டவை, யமுனை நதி அமைப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் சுமார் 41,000 மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரயில் போக்குவரத்து நிறுத்தம்: டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து இன்று காலை 6.00 மணி முதல் ஜூலை 11 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இதற்கிடையில், தொடர் மழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள விகாஸ்நகரிலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. முன்னதாக, பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீர்மட்டம் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் 206.04 மி.மீ. ஆக இருந்தது.
அபாய அளவு: டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம், திங்கள்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) மாலை 5 மணியளவில் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டியதாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைநகர் உட்பட வடமேற்கு இந்தியா முழுவதும் மழை பெய்து வருவதால் ஹரியானா ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஆற்றில் அதிக தண்ணீரை திறந்துவிட்டதால் யமுனையில் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வடமேற்கு இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் "கனமழை முதல் மிக கனமான" மழைப்பொழிவு பதிவாகிய உள்ளது.
அவை உள்கட்டமைப்பை பெருமளவில் சேதப்படுத்தி உள்ளன. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.