ஹைதராபாத்: தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஜி. வெங்கடசுவாமி அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், "துபக்கா இடைத்தேர்தலின்போது காவல் துறையினர் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றினர். இவ்வழக்கில், என்னைத் தொடர்புப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், காவல் ஆணையருக்கு நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனது நற்பெயருக்கு கலங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வழக்கில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதனால், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளேன். ஏழு நாள்களுக்குள் மன்னிப்புக் கேட்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். ஹைதராபாத்தின் 9ஆவது நிஜாம் போல் சந்திரசேகர் ராவ் நடந்துகொள்கிறார். காவல் துறையினரை தனது சுயநலத்துக்காகவும், பாஜகவினரை மிரட்டவும் சந்திரசேகர் ராவ் தவறாகப் பயன்படுத்துகிறார்.
கடந்த சில மாதங்களாக டிஆர்எஸ் கட்சியின் ஊழல் குறித்து நான் பேசிவருகிறேன். பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு டிஆர்எஸ் கட்சி பணம் கொடுத்துள்ளது. வார்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வீதம் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து சந்திரசேகர் ராவுக்கு பாடம் புகட்ட முடிவு செய்துவிட்டனர்" என்றார்.
பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (டிசம்பர் 1) நடைபெற்றுவருகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
இதையும் படிங்க: 'மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்!'