சிஎஸ்சி (Centre for Science and Environment) எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த வெபினார் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சௌம்யா சுவாமிநாதன், கோவாக்சின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் உலக சுகாதார அமைப்பு முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.
கோவாக்சின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம், தற்போது WHO இணையதளத்தில் மருந்து குறித்த முழு தகவல்களையும் பதிவேற்றியுள்ளதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அதனை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அவசர கால பயன்பாடாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இதுவரை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை.
முன்னதாக அவசரகாலப் பயன்பாட்டுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுவிடுவோம் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது. மேலும், இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள், பாரத் பயோடெக் நிறுவனம் இடையேயான கூட்டம் ஒன்று ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது.
கோவாக்சின் தடுப்பூசி, கரோனா தொற்றுக்கு எதிராக 77.8 விழுக்காடு பலன் தரும் என்றும், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 விழுக்காடு பலன் தரும் எனவும் சமீபத்திய மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’இனி 2 வயது முதல் கோவாக்சின் தடுப்பூசி’ - டிசிஜிஐ அனுமதி