டெல்லி : 1934ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த சலீம் துரானி இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டுமே விளையாடி உள்ளார். இடது கை ஆட்டக்காரரான துரானி, 1960ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல்முறையாக களமிறங்கினார்.
கடைசியாக 1973ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள துரானி 75 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஒரு போட்டியில் 177 ரன்கள் வழங்கி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாக உள்ளது.
இதேபோல் பேட்டிங்கில், ஆயிரத்து 202 ரன்கள் எடுத்த துரானி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகப்பட்சமாக 104 ரன்கள் எடுத்து உள்ளார். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சதம், 7 அரை சதங்களை துரானி எடுத்து உள்ளார். தனது பள்ளிப்பருவத்தில் கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய அவர், தந்தை வழியிலேயே கிரிக்கெட் வீரராக மாறினார்.
துரானியின் தந்தையான அப்துல் அஜீஸ் 1935 - 36ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். துரானியின் சிக்ஸ் அடிக்கும் திறனை இன்ஸ்பிரேசனாக கொண்டு பல்வேறு ஆட்டக்காரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
சவுராஸ்ட்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் துரானி விளையாடி உள்ளார். கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின் 1973ஆம் ஆண்டு நடிகை பர்வீன் பாபிக்கு ஜோடியாக சரித்ரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதேபோல் அர்ஜூனா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பையும் துரானி தன் வசப்படுத்தி உள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பிசிசிஐயால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி துரானி கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் 88 வயதான சலீம் துரானி உடல் நலக்குறைவால் இன்று (ஏப். 2) அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். சலீம் துரானியின் மறைவுக்கு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ISRO : இஸ்ரோவின் ஆர்எல்வி சோதனை வெற்றி! உலகின் முதன் முதலாக சாதித்த இஸ்ரோ!