மும்பை: புயலால் கவிழ்ந்த கப்பலில் இருந்தவர்களில் கடலில் மூழ்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
கடலில் உள்ள எண்ணெய் கிணறுகளில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தங்குவதற்காக, 'பார்ஜ்' எனப்படும் அனைத்து வசதிளுடன் கூடிய பெரிய மிதவை கப்பல்கள் உள்ளன. மூன்று மிதவை கப்பல்கள் மற்றும் ஒரு எண்ணெய் எடுக்கும் இயந்திரம் கடலுக்கு நடுவே நிறுத்தப்பட்டு இருந்தன.
அதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சூழலில் மே 17ஆம் தேதி 'டவ்-தே' புயலால் மும்பை கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று உருவானது. இதில், 'பி - 305' என்ற மிதவைக் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது.
அதில் 261 பேர் பணியில் இருந்தனர். அவர்களில் 37 பேர் உயிரிழந்ததாகவும், 38 பேரைக் காணவில்லை எனவும் கடற்படை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை கடற்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சூழலில் தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காணாமல் போன 26 பேரைத் தேடிவருகின்றனர். இதுவரை 186 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.