கேரளா: தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்துவந்தது. கடந்த 15ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுபெற்றதால் கேரளா முழுவதும் கனமழை பெய்தது.
இடைவிடாது பெய்த கனமழையால் கேரளாவே வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்துவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பலத்த மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் கூட்டிங்கால், இடுக்கி மாவட்டம் கோக்கையார் பகுதிகளில் கடந்த 16 அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கியவர்களை மீட்பதற்காக ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் பல்வேறு இடங்களில் இதுவரை 281 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 10 ஆயிரத்து 956 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கேரளாவில் மொத்தம் 11 தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force) குழுக்கள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஒரு ராணுவப் பிரிவும் திருவனந்தபுரத்திலும், ஒன்று கோட்டயத்திலும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் விமான படையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள், திருவனந்தபுரம், கொச்சியில் அவசர உதவிக்காகத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாத்திரத்தை படகாக மாற்றி திருமணம் - கேரளாவில் ருசிகர சம்பவம்