மகாராஷ்டிரா: அர்ஜுன்ராம் பிஷ்னோய் (26), புனிகுமாரி தோலாரம் பிஷ்னோய் (20) என்ற தம்பதியினர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பிறந்து 16 மாதங்களே ஆன ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தோலாராம் பிஷ்னோய் தனது குழந்தைக்கு மது கொடுத்துள்ளார்.
மேலும், அவர்கள் குழந்தையின் உடலியல் செயல்களுக்கு புறம்பாகவும், குழந்தையின் வாய் வழியாகவும் அறுவறுக்கத்தக்க சில சித்ரவதைகளை செய்துள்ளனர். இதனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் அழுகையை நிறுத்த துணியால் கழுத்தை நெரித்துள்ளனர். இதனயடுத்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
எனவே, உயிரிழந்த குழந்தையை அப்புறப்படுத்த கணவனும் மனைவியும் ஹைதராபாத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் இருந்து, செகந்திராபாத் ராஜ்கோட் எக்ஸ்பிரஸில் புறப்பட்டனர். இந்தப் பயணத்தின்போது குழந்தை அழாமலும் அசையாமலும் இருந்ததால் சக பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து சக பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், தம்பதிகள் இருவரையும் ஜனவரி 4, 2022 அன்று இரவு 9 மணியளவில் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், குழந்தையை கொன்றது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குழந்தையை பரிசோதித்ததில், குழந்தை இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் அறிக்கையின்படி, லோஹ்மார்க் காவல்துறையினர், தோலாராம் பிஷ்னோய் மற்றும் புனிகுமாரி பிஷ்னோய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஹைதராபாத், செகந்திராபாத், சோலாப்பூர், ராஜஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 31 சாட்சியங்களிடம் ஆன்லைனில் விசாரணை நடத்தப்பட்டது. ஏப்ரல் 26, 2022 அன்று தொடங்கிய இவ்வழக்கின் விசாரணை, மே 6 அன்று முடிவடைந்ததது. இதில் கிடைக்கப்பெற்ற மருத்துவச் சான்றுகள், சாட்சிகள் மற்றும் டிஎன்ஏ அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தோலராம் பிஷ்னோய் மற்றும் புனிகுமாரி பிஷ்னோய் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி யு.எல்.ஜோஷி தீர்ப்பளித்தார்.
இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரதீப் சிங் ராஜ்புத், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்தீப் ஷிண்டே, வழக்கறிஞர் ஃபெரோஸ் ஷேக், வழக்கறிஞர் அஞ்சலி பாபரே ஆகியோர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... நான்காவது நபர் கைது...