அவுரங்காபாத்: மஹாராஷ்டிரா மாநிலத்தில் காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, தானும் தீ வைத்துக்கொண்டு சிகிச்சைப்பெற்று வந்த மாணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மரத்வாடா கல்லூரியில் பிஹெச்டி(PHD) படித்து வந்த கஜனன் முண்டே எனும் மாணவர், அதே கல்லூரியில் பிஹெச்டி(PHD) படித்து வந்த பூஜா சால்வே எனும் பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த சில நாட்களாக, பூஜா கஜனனை தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று பூஜா கல்லூரி ஆய்வகத்தில் பிராஜக்ட் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த கஜனன் முண்டே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி பின்னர், தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி கஜனன் முண்டே இன்று உயிரிழந்தார். பூஜா இன்னும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: சூட்கேஸில் சடலமாக இளம்பெண் - ஆணவக்கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம்!