ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த தோல்வியை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டது. இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், கேப்டன் விராட் கோலி உள்பட அனைவரும் ஆதரவாக கருத்துகளை வெளியிட்டனர். விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது மிகவும் மோசமான செயல் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விராட் கோலியின் ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைக்கு ட்விட்டர் பதிவு மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலர், இது பாகிஸ்தானின் இயந்திர முறை ட்விட்டர் பதிவு என்று குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து மகளிர் ஆணையமும் ஒரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நேரத்தில், அந்த ட்விட்டர் கணக்கின் தனிப்பட்ட குறியீடு எண் '1386685474182369290' என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கணக்கு நிர்வகிக்கும் மின்னஞ்சல் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.
அதன்மூலம் மேற்கொண்ட ஆய்வில், அந்த கணக்கு இந்தியாவில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது எனவும், அந்த கணக்கு மூலம் பாஜகவுக்கு ஆதரவான பதிவுகள் அதிகம் பகிரப்பட்டுள்ளதாகவும், தெலுங்கு மொழி ட்வீட்கள் மறுட்வீட் செய்யப்பட்டுள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுகுறித்து சைபர் காவல் துறையினரின் ஆதரவுடன் மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "அன்புள்ள விராட், அவர்களிடம் யாரும் அன்பு காட்டாததால் அவர்கள் அனைவரும் வெறுப்புணர்வு நிறைந்தவர்களாக உள்ளனர். அதனால் அவர்களை மன்னியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை - நீதி வேண்டி உறவினர் சாலை மறியல்!