தன்பாத் (ஜார்க்கண்ட்): தன்பாத் ரயில்வே கோட்டம், பிரதங்கந்தா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சட்டகுலி கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று இரவு (ஜூலை 12) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் சிக்கினர்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு பேர் நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில் மண்சரிவில் சிக்கிய மேலும் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக இன்று (ஜூலை 13) அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த தொழிலாளர்கள் நிரஞ்சன் மஹ்தோ, பப்பு குமார் மஹ்தோ, விக்ரம் குமார் மஹ்தோ மற்றும் சௌரப் குமார் திவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ரயில் தண்டவாளத்திற்கு 10 அடிக்கு கீழ் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். சரக்கு ரயில் கடந்து சென்ற பிறகு மண் சரிந்து விபத்து நடந்தது" என்றனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வந்த ரயில்வே கோட்ட மேலாளர் ஆஷிஷ் பன்சால் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், ரூ..20 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: Loan App Fraud - மிரட்டலுக்கு பயந்து பெண் தற்கொலை