ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதில், வடக்கு காஷ்மீர் பந்திபோரா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் உள்ள ஹாஜின் - ஏ, டிரகுமுல்லா ஆகிய வார்டுகளில் பாகிஸ்தானியர்கள் வெற்றிபெற்றதாகக் கூறி அதற்கான முடிவுகளை அறிவிக்காமல் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அலுவலர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த ஷாசியா அஸ்லாம், சோமியா சடாஃப் ஆகிய இரு பெண்கள் காஷ்மீரை சேர்ந்தவர்களை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஹாஜின் - ஏ, டிரகுமுல்லா ஆகிய வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களாக களம் கண்டனர். தேர்தலுக்காக அவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது குறித்து அலுவலர்கள் கூறுகையில், "பாகிஸ்தானியர்கள் வேட்பாளர்களாக களம் கண்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
தாங்கள் பாகிஸ்தானியர்கள் என்பதை விண்ணப்பங்களில் அவர்கள் குறிப்பிடவில்லை. எனவேதான், வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்" என்றார்.