மத்தியப் பிரதேசம்: ரேவா பகுதியில் சில நாள்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் அவதியிலிருந்த 80 வயது மூதாட்டி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, அவரது குடும்பத்தினர், ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும், ஆம்புலன்ஸ் வராததால், அவரது நான்கு மகள்கள், அம்மூதாட்டியை தங்களின் தோள்பட்டையில் சுமந்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அதாவது, தங்களது தாயினை கட்டிலில் வைத்து, அவரை கட்டிலுடன் தோள்பட்டையில் சுமந்து, நடந்தே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதில், ஒருவர் தாயை தோள்பட்டையிலும், இடுப்பில் குழந்தையையும் வைத்து சுமந்து சென்றார். இருப்பினும், அவர்களால் தங்களது தாயைக் காப்பாற்ற முடியவில்லை. ஏனெனில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே, அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
தாய் உயிரிழந்ததாகக் கூறியதையடுத்து, மீண்டும் தங்களது தோள்பட்டை மீது சுமந்துகொண்டே வீடு திரும்பியுள்ளனர், அவரது நான்கு மகள்கள். ஆம்புலன்ஸ் வராததால், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தோள்பட்டையில் சுமந்து சென்றதும், மீண்டும் வீட்டிற்குத் தோள்பட்டையில் சுமந்தே தாயின் உடலை எடுத்து வந்ததும் காண்போரை கண்கலங்கச் செய்தது. இதனை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொலி வைரலாகி வருகிறது.