பெங்களூரு: கொல்கத்தாவைச் சேர்ந்த செனாலி சென் (39) பிசியோதெரபியில் முதுகலை பட்டம் படித்தவர். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். செனாலி குடும்பத்தினர் மைக்கோ லேஅவுட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்து உள்ளனர்.
அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, தாயை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு செனாலி சென்-க்கு வந்து உள்ளது. இதனால் அவர் தன் தாயை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்தார். ஆனால், ஒரே வீட்டில் வசித்து வந்த செனாலியின் தாயாரும், மாமியாரும் தினமும் சண்டை போட்டுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அடிக்கடி நடக்கும் அவரது தாயார் - மாமியாருக்கு இடையிலான சண்டையினால் சோர்வடைந்த செனாலி தனது தாய்க்கு தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக ஊட்டி உள்ளார். இதனால் இரவு 11 மணியளவில் தாய் வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்ட நிலையில் அவரது கழுத்தை நெரித்து செனாலி கொலை செய்து உள்ளார்.
இதையும் படிங்க: ஒடிசா டாடா ஸ்டீல் ஆலையில் விபத்து - 19 தொழிலாளர்கள் படுகாயம்!
பின்னர், அவரது தாயின் உடலை சூட்கேஸில் வைத்து, அதனுடன் தந்தையின் புகைப்படத்தையும் வைத்து வாடகை வண்டியை முன்பதிவு செய்து நேரடியாக மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு வந்து உள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளே அவரது தாயை கொலை செய்து உடலை பெட்டியில் அடைத்து காவல் நிலையம் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.