ஹூப்ளி: கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த ஸ்ரீதர் கங்காதர்(26) என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், தன்னை சிலர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், "எனது நண்பர் அத்தவர் ரஹ்மான், கடந்த மே மாதம் முதல் என்னை இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற முயற்சித்து வந்தார். அவர் என்னை பெங்களூருவில் உள்ள பனசங்கரி மசூதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அஜீஸ் சாப் என்பவர் எனக்கு இஸ்லாம் குறித்து போதிக்க தொடங்கினார்.
பெங்களூருவில் பல மசூதிகளுக்கும் அழைத்துச் சென்று இஸ்லாம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் என்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தினர். நான் சாப்பிட மறுத்தபோது என்னை அடித்து உதைத்தனர். பின்னர் திருப்பதி மற்றும் அதன் அருகில் உள்ள மசூதிகளுக்கும் அழைத்துச்சென்று குரானை கற்கவும், இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்யவும் கற்றுக்கொடுத்தனர்.
என் பெயரை முகமது சல்மான் என்று மாற்றி, கையில் துப்பாக்கியை கொடுத்து புகைப்படம் எடுத்தனர். நான் மூன்று இந்துகளை இஸ்லாமியராக மாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை போலீசில் ஒப்படைத்துவிடுவோம் என்றும் மிரட்டினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீதர் கங்காதர் கடந்த 9ஆம் தேதி புகார் அளித்ததாகத் தெரிகிறது. இந்தப் புகார் தொடர்பாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மது அருந்த வைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு